தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வேலைவாய்ப்பு மோசடி, சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் டாஸ்மாக் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்குகள் ஏற்கெனவே உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் பார் உரிமங்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான விநியோகம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர், மற்றும் சில நிறுவனங்கள், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் டாஸ்மாக் அலுவலகங்கள், கிடங்குகள், தனியார் மதுபான உற்பத்தி நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமான 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வரவு -செலவு பதிவுகள், டெண்டர் ஆவணங்கள், கணினி தகவல்கள் மற்றும் ஒப்பந்த கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கூடுதல் எஸ்.பி. யுவராஜ் தலைமையிலான குழுவினர் சுமார் மூன்றரை மணி நேரம் நேற்று விசாரணை நடத்தினர்.
செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில், அவரது பெற்றோர் வசிக்கும் ராமேஸ்வரப்பட்டி வீடு, முன்னாள் நேர்முக உதவியாளர் சுப்பிரமணி, திமுக நிர்வாகி பாஸ்கர், சக்தி மெஸ் கார்த்தி, ரமேஷ் ஆகியோரது வீடுகள் மற்றும் டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதற்கிடையில், சென்னை தி.நகரில் உள்ள கேல்ஸ் டிஸ்டிலரீஸ் அலுவலகம், எஸ்.என்.ஜே. குழுமத் தலைமை அலுவலகம், புதுக்கோட்டை, திருவாரூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் தனியார் மதுபான ஆலைகள், காலி பாட்டில் சுத்திகரிப்பு நிறுவனங்கள், டாஸ்மாக் கிடங்குகளிலும் சோதனை நடைபெற்றது. நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் இருப்பு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகளின்படி, பார் உரிமங்களுக்கான டெண்டர்களில் ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான எண்களில் டிமாண்ட் டிராப்ட்டுகள் எடுத்து பலர் பெயரில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு, விருப்பமான நபர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், உரிமம் புதுப்பிக்கப்படாத பார்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மட்டும் அரசுக்கு ரூ.32.81 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல், டாஸ்மாக் போக்குவரத்துக்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவிடப்படுகிறது. இதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. காலி பாட்டில்கள் விநியோகத்தில் போலி பில்கள் மூலம் பணம் கைமாறியதாகவும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாகவும் எப்ஐஆரில் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் 145 பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத் துறையும் ஏற்கெனவே விசாரணை நடத்தி வருகிறது.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் கணக்குப் பதிவுகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்படலாம். வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் தீவிரப்படுத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “என் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து அதன் நகலை வழங்கியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாகச் சட்டரீதியாகப் பதிலளிப்போம். ‘மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை’ என்பதே எங்கள் நிலைப்பாடு” என்றார்.
Mynilgiris is a trusted digital news platform dedicated to delivering the latest updates from the Nilgiris district, Tamil Nadu, covering local news, tourism, politics, business, education, and community events.